அறிமுகம்
பெரும்பாலான பக்தர்கள் பந்தளத்தை தவிர்த்துவிட்டு கோட்டையம் மற்றும் எர்ணாகுளம் வழியாக சபரிமலைக்குச் செல்கிறார்கள். ஐயப்பன் வளர்ந்த இடம் தான் இந்த பந்தளம். பந்தள மகா ராஜாவின் குடும்ப கோவில் இங்கு உள்ளது. பந்தளத்தில் அமைந்துள்ள சன்னிதியில் புலியுடன் நிற்பது போல் காட்சி தருகிறார் மணிகண்டன். பந்தள மகா ராஜாவிடம் வளர்ந்த போது தாம் கடவுளின் அவதாரம் என்று தெரியாமலேயே சுமார் 12 ஆண்டுகள் ஓடி ஆடி விளையாடிய புனிதமான இடம். மணிகண்டன் வளர்ந்த அரண்மனையும் அவர் படித்து பயன்படுத்திய ஒலைகளும் இன்னும் இங்கு உள்ளன. இங்குள்ள குளமானது ஐயப்பன் குளிப்பதற்கு ஆகவே ஏற்படுத்தப்பட்டதாகும். அந்த குளத்தில் நீர் எப்பொழுதும் வெதுவெதுப்பாக இருக்கும். மற்ற இடங்களில் உள்ள நீர் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். மகரவிளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான திருஆபரண பெட்டி இங்கிருந்துதான் புறப்படுகிறது. மார்கழி 26ம் தேதி பந்தளத்தில் இருந்து புறப்படும் திருவாபரணம் தை முதல் தேதி சபரிமலை வந்து சேருகிறது. மகர சங்கிரம தினத்தில் ஜோதியாய் ஐயன் தெரியும் போது மட்டுமே சபரிமலை ஐயப்பனுக்கு திருவாபரணம் சார்த்தப்பட்டு இருக்கும்.
திருஆபரண பெட்டி
ஐயப்பன் திருவுருவில் அணிவிக்கும் ரத்ன மகுடம், நூபுரம், ஆரம், கடகம், அங்கங்கள் பதக்கம் ஆகியவை ஒரு பெட்டியிலும், மாளிகைபுரத்து அம்மனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் மற்றொரு பெட்டியிலும் கொண்டு வருவர். தை முதல்நாள் பிற்பகலில் திருஆபரண பெட்டி சபரிபீடம் வந்தடையும்போது வானத்தில் பருந்துகள் தோன்றி திருஆபரண பெட்டியுடன் தொடர்ந்து வரும் காட்சி நமக்கு மிகவும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
Comments
Post a Comment